ad11

விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்- சினிமா விமர்சனம்...

January 07,2018  

Vinnai Thandi Vantha Angel Movie Review

இப்படத்திற்கு, கதை எழுதி இயக்கியிருக்கும் கே.பழனி "பாகுபலி" படத்தில் ராஜமெளலியின் உதவியாளராம். மெகா பட்ஜெட் குருநாதரின் பெயரை இந்த மினிமம் பட்ஜெட்டில் பெரிதாகவே காபந்து செய்திருக்கிறார் "பாகுபலி" கே.பழனி....புராண கதையோடு வின்னுலம், பூலோகம் வாழ்க்கையையும் கலந்து காதல், ஆக்‌ஷன், காமெடியுடன் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.பழனி. பாகுபலி முதல் பாகத்தில் பணியாற்றியதால், அதே பாணியில் வித்தியாசம் காண்பித்து இயக்கி இருக்கிறார்.

ஆந்திரா அமராவதி மாகாணத்தில் பழங்கால சிலை ஒன்றை ஷாயாஜி ஷிண்டே கண்டெடுக்கிறார். மிகவும் அற்புதமான இந்த சிலையை பல கோடி ரூபாய்க்கு விலை பேசி சென்னையில் உள்ள ஒருவரிடம் விற்க்கிறார்.

அதனை நாயகன் நாக அன்வேஷ் மற்றும் அவரது நண்பர் சப்தகிரி மூலம் சென்னைக்கு வேனில் அந்த சிலையை அனுப்பி வைக்கிறார் ஷாயாஜி ஷிண்டே. மர்ம பார்சல் என்று நினைத்து கொண்டு செல்லும் நாக அன்வேஷை செக்போஸ்டில் வைத்து போலீசார் மடக்குகின்றனர்.

போலீசில் இருந்து தப்பிக்கும் நாக அன்வேஷின் வேன் விபத்துக்குள்ளாக, அதிலிருந்து சிலை வெளியே வந்து விழுகிறது. சிலையை பார்த்த நாக அன்வேஷ் பிரமித்துப்போய், சிலையை வர்ணிக்க ஆரம்பிக்கிறார். நாக அன்வேஷின் புகழ்ச்சி உரையாடலால் அந்த சிலை அழகிய பெண்ணாக மாறுகிறார். பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நாக அன்வேஷ், அவருடன் பழக ஆரம்பிக்கிறார். நாளடைவில் இவர்களுக்குள் காதல் வருகிறது.

இறுதியில் அந்த பெண் யார்? அவர் சிலையாக மாற காரணம் என்ன? சிலையை கொடுத்து அனுப்பிய ஷாயாஜி ஷிண்டேவிற்கு இந்த விஷயம் தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை. வாழ்க்கை என்பது மிகவும் குறுகிய காலம். அதில் விரைந்து சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாநாயகனாக நாக அன்வேஷ் நடித்திருக்கிறார். நாயகியாக ஹேபா பட்டேல் நடித்திருக்கிறார். தேவலோகத்து அழகியாகவும், பூலோக நற்குணம் கொண்ட பெண்ணாகவும் நடித்திருக்கிறார். நண்பராக வரும் சப்தகிரியின் நடை, உடை, பாவனைகள் மற்றும் காமெடிகள் ரசிக்க வைத்திருக்கிறது. வி.பிரபாகரின் வசன வரிகளில் டைம்மிங் வசனங்களும், அரசியல் நையாண்டிகளும் படத்திற்கு பெரிய பலம். மொத்தத்தில் ‘விண்ணைத்தாண்டி வந்த ஏஞ்சல்...கொஞ்சம்...அழகுதான்...